×

இன்னமும் சனாதனம், வர்ணாசிரமம், கடந்த காலம், வேத காலம் என்று பெருமை பேசி பிரிவினையை வளர்ப்பது யார்?: ஆளுநர் ரவிக்கு முரசொலி நாளேடு கேள்வி

சென்னை: இன்னமும் சனாதனம், வர்ணாசிரமம், கடந்த காலம், வேத காலம் என்று பெருமை பேசி பிரிவினையை வளர்ப்பது யார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முரசொலி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது. திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தன எனும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் மனுவை விடவும் வேறு பிரிவினைவாதி வேண்டுமா? என்றும் தொட்டில் முதல் கல்லறை வரை ஆண் கட்டுப்பாட்டில் பெண் இருக்க வேண்டும் என்பது தானே மனுவின் பிரிவினை? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் திராவிடம் என்பது ஏமாற்று சொல் அல்ல; விழிப்புணர்வு சொல் என்றும் திராவிடம் என்பதும், தமிழ் என்பதும் ஒற்றை பொருள் தரும் இரட்டைச் சொற்கள் தான் என்றும் தமிழ்நாடு ஆளுநருக்கு முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. பெரியார் எழுதியதை போல நாமும் திராவிடன் என்ற சொல்லை விடக்கூடாது என்பதையே தமிழ்நாடு ஆளுநர் உணர்த்திக் கொண்டே இருப்பதாக குறிப்பிட்டுள்ள முரசொலி நாளேடு, தமிழினத்தின் உயர்வுக்கும், மேன்மைக்கும் அடித்தளமான திராவிட மாடலை ஆட்சியியல் தத்துவமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக என்றும் வளர்ச்சியும், சமூக மாற்றமும் இவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் என்றும் தலையங்கத்தில் ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளது. திராவிட மாடல் வளர்ச்சியின் மீதான கோபத்தை தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள முரசொலி நாளேடு, இன்னமும் சனாதனம், வர்ணாசிரமம், கடந்த காலம், வேத காலம் என்று பெருமை பேசி, பிரிவினையை வளர்ப்பது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags : Governor ,Ravi Murasoli , Sanatanam, Varnasiram, Parivinya, Aalnavar Ravi, Murasoli Chronicle
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!